இஸ்ரேல் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய சர்வே..! நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய மக்கள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 7 ம் திகதி கடும் மோதல் தொடங்கியது.
பலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்' அமைப்பினர் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல் குறித்து சர்வே
இதுதவிர இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதலை நடத்தினர்.
தங்களின் கண்ணில் பட்ட பொதுமக்களை அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த போர் நடவடிக்கைக்கு மத்தியில் தாக்குதல் குறித்து இஸ்ரேல் மக்களிடம் சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 510 பேர் ஓட்டளித்தனர்.
அதன்படி கடந்த 7ம் திகதி காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பு ஏற்க வேண்டும் என சர்வேயில் பங்கேற்ற 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நெதன்யாகுவிற்கு 28 சதவீதம்
மேலும், அவர்கள் ஹமாஸ் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு 65 சதவீதம் பேர் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி தற்போதைய பிரதமர் நெதன்யாகுவை விட முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி கான்ட்ஸ் சிறந்த பிரதமராக செயல்பட வாய்ப்புள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது பென்னி கான்ட்ஸ் சிறந்து பிரதமராக இருப்பார் என 48 சதவீதம் பேரும், நெதன்யாகு தான் சிறந்த பிரதமர் என 28 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.