பிள்ளைக்குச் சாப்பிட உணவில்லை என்றால் ஒரு தாய் வீதிக்கு வரமாட்டாரா?? - எரான் விக்ரமரத்ன கேள்வி
பிள்ளைகளை வீட்டில் சாப்பிடவும் குடிக்கவும் விடவில்லையென்றால் ஒரு தாய் வீதிக்கு வரமாட்டாளா? அதேபோல் அத்தியவசியத் தேவைகளுக்குரிய விடயங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில் மக்கள் வீதிக்குத்தான் வருவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மக்களுக்கு வழங்குவதற்கு ஒன்றுமில்லை என்றும் மக்களிடமிருந்தே எடுப்பதற்கு உள்ளதாகவும் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்று நிதி அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பணம் இல்லாத நிதியமைச்சர் நான்தான் என்று தனது முதல் பேச்சிலேயே தெரிவித்தார். தனது அரசாங்கம் நாட்டை வக்குரோத்து நிலைக்கு தள்ளி விட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது பற்றி திரு.டியூ குணசேகர பேசுவதை பார்த்தேன். அவரது தரவுகளில் சிறிய பிழை இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் 2015 இல் ஆட்சிக்கு வந்த போது தேசிய வருமானம் 10% இருந்தது, நாம் நாட்டை கையளிக்கும் போது 13%க்கு அன்மித்திருந்தது. மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த போதே அரச வருமானம் அதிகரித்துக் கொண்டு வந்தது.
இந் நாட்டில் வரவு செலவுத் திட்டத்தில் இரட்டைப் பிரச்சினைகள் உள்ளன. அது வரவு செலவுத் திட்டத்தில் உள்ள வரவுக்கும் செலவுக்குமிடையிலான மிகப் பெரிய இடைவெளியாகும்.
படிப்படியாக அதை 5.5இற்கு கொண்டு வந்து 3.5இற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டோம். கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் வரவுக்கும் செலவிற்குமான இடைவெளி 14% ஆக இருந்தது. இரண்டாவது பிரச்சினை ரூபா சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல இன்று டொலர் பற்றாக்குறையும் பெரிய ஒரு பிரச்சினையாகும்.
டொலர் பற்றாக்குறை இலங்கையில் பெரும் சரிவிற்கு காரணமாகும். இந்நிலை நீடித்தால் பெரிய ஆபத்து நேரிடும்.
வெளிநாடு பயணிக்கும் போது கிரடிட் அட்டை பயன்படுத்த நினைப்பவர்கள் பாதுகாப்பாக இருங்கள். சில நேரங்களில் இரத்துச் செய்யப்பட்டதாக காண்பிக்கலாம். அரசாங்கத்திடம் கொள்கையோ, நிர்வாகமோ இல்லாததை பார்க்கிறோம். மிகவும் பலவீனமான நிர்வாக ஒழுங்குகளே முன்னெடுக்கப்படுகிறது.
அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது. ஒரு நாள் சொன்னதை மறுநாள் மாற்றுகிறார்கள். வர்த்தமானிகள் வெளியிடுவதும் மீளப் பெறுவதுமாகவுள்ளது. இன்றைய பொருட்களின் விலைகளைப் பார்த்தால், ஒரு ரொட்டியின் சராசரி விலை 240 ரூபாயாக இருப்பதைக் காணலாம்.
தீப்பெட்டிகளுக்குக் கூட என்று நிறைய பேர் பிச்சை எடுக்கிறார்கள். நாங்கள் சட்டத்தை மீற விரும்பவில்லை. பிள்ளைகளை வீட்டில் சாப்பிடவும் குடிக்கவும் விடவில்லையென்றால் ஒரு தாய் வீதிக்கு வரமாட்டாளா? அத்தியவசியத் தேவைகளுக்குரிய விடயங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில் மக்கள் மக்கள் வீதிக்கு வருவார்கள்.
சீனியின் வரிச் சலுகையால் மக்கள் பயனடைந்தனரா? அரிசியின் விலை குறைப்பால் மக்கள் பயனடைந்தனரா? என்று வினவுகிறோம்.போலியான மோசடிகளிலயே ஈடுபட்டனர். ஆட்சியாளர்களின் தொழிலதிபர்களுக்கு பெரும் இலாபம் கிடைத்தது.
அண்மையில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தோம் அங்கு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மன்னார் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தோம்.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகின்றோம். நாங்கள் வடக்கிற்குச் செல்லும் போதும், அடி மட்டத்தில் உள்ள தென்னிலங்கையின் பொருளாதார நெருக்கடியே அந்தப் பிரதேசங்களிலும் இருப்பதைக் காணமுடியும்.
வடக்கில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். விளைச்சல் குறைந்து விவசாயிகளின் வருமானம் குறைவதுடன், அங்குள்ள மக்களுக்கு உரப் பிரச்னை அதிக சிக்கலை ஏற்ப்படுத்துள்ளது.
வேறு காரணங்களுக்காக, வடக்கின் முக்கிய பிரச்சினை பொருளாதார பிரச்சனையாக வெளிப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் நிறைய பேர் இருப்பதால், அத்துறை சார் மக்கள் பெரிய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும் சுற்றுலாத் தொழிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். வடக்கில் யுத்தத்தின் பின்னர், பல பிரச்சினைகள் தோன்றியதோடு, காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிய பலர் விரும்பினர்.
அவர்களிடம் இறப்பு சான்றிதழ் கூட இல்லை. காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறியும் வகையில் எமது நல்லாட்சி அரசாங்கம் அதற்கான அலுவலகத்தை சரியான நேரத்தில் திறந்தது.
அந்த திட்டத்தை இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வடக்கில் உயிர்ச்சேதங்களுக்கு மேலதிகமாக ஏனைய பாரிய சொத்துக்களும் கட்டிடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. எங்கள் ஆட்சிக் காலத்தில் அதற்கு இழப்பீடு வழங்க மற்றொரு அலுவலகமும் திறக்கப்பட்டது.
இத்தகைய இழப்பீடுகளுக்கு புதிய நிதியமைச்சரிடம் நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் செற்ப அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தினால் வடக்கிலோ அல்லது தெற்கிலோ சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வடக்கில் இருந்து மாணவர்கள் தெற்கிற்கும், தெற்கிலிருந்து மாணவர்கள் வடக்கிற்கும் சென்று அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அலுவலகம் ஒன்றையும் திறந்தோம். அதனை வலுப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம். நாம் ஒரு ஜனநாயக சிவில் அரசாங்கத்தால் ஆளப்படும் ஒரு ஜனநாயக நாடாகும்.
அரச தலைவர் இருக்கிறார். நாடாளுமன்றம் ஒன்று இருக்கிறது, சுதந்திரமான நீதிமன்றங்கள் இருக்கிறது, வடக்கு மக்கள் உணரும் வகையில் ஜனநாயக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது தேசிய கீதம் "ஒரு தாயின் குழந்தைகள்" என்று கூறுகிறது, அது உண்மையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.