வடகிழக்கில் ஜேவிபியை நிராகரித்த மக்கள் : சி. வி. விக்னேஸ்வரன் புகழாரம்
தேசிய மக்கள் சக்தி என்ற முலாம் பூசி வலம் வரும் ஜே.வி.பியை இந்தத் தேர்தலில் வட கிழக்கில் நிராகரித்துள்ளமை தனக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமாக இருக்கின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில்அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்புமனு நிராகரிப்பு
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள் சிங்கள தேசிய கட்சிகளை குறிப்பாக தேசிய மக்கள் சக்தியை நிராகரித்து தமிழ் தேசிய கட்சிகளுக்கு அமோக ஆதரவு கொடுத்துள்ளமைக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அடுத்ததாக தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிட்ட தொகுதிகளில் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியிருக்கின்றமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
யாழ் மாநகர சபை உள்ளிட்ட பல தொகுதிகளிலும் எமது வேட்புமனுக்கள் நியாயமற்றமுறையில் நிராகரிக்கப்பட்டமை ஒட்டுமொத்தமாக எமது கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு பாதகமான நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது.
இருந்த போதிலும் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்ற ஆதரவு எமது கட்சி எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என்று மக்கள் வெளிப்படுத்தியுள்ள அவாவாக நான் பார்க்கின்றேன்.
மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாக எமது கட்சியை மேலும் பலபடுத்தி தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வுக்கு பாடுபடுவதற்கு நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை
நான் தேர்தல் அரசியலில் இருந்து சற்று எட்ட நின்று இளையோர்களை அரசியலில் துடிப்புடன் ஈடுபடவைப்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் பணியாற்றிவருகின்றேன்.
எனது இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. என்னால் முடிந்தளவுக்கு நான் இருக்கும்வரை தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவேன்.
வட மாகாணத்தில் எமது கட்சியில் இருந்து 18 பேர் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியிருக்கின்றார்கள். சில சபைகளில் நாம் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
நாம் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி வருகின்றோம். உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நல்லாட்சி, பொறுப்புக்கூறல், தலைமைத்துவம் போன்ற விடயங்களில் சில பயிற்சிப்பட்டறைகளை ஏற்பாடு செய்து அவர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்.
என்னைப் பொறுத்தவரையில் ஏனைய எல்லா சிங்கள தேசிய கட்சிகளையும் விட தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு எதிராக உறுதியான கோட்பாட்டு ரீதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற கட்சி தேசிய மக்கள் சக்தி என்ற முலாம் பூசி வலம் வரும் ஜே.வி.பி தான். மக்கள் அவர்களை இந்தத் தேர்தலில் வட கிழக்கில் நிராகரித்துள்ளமை எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழ் மக்களின் தாயகமான இணைந்த வடக்கு - கிழக்கை சட்டரீதியாக பிரித்தமை மட்டுமன்றி சுனாமியினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் நேரடியாக கிடைப்பதைக்கூட சகித்துக்கொள்ளாமல் ஜே.வி.பி முன்னர் தடுத்து நிறுத்தியிருந்தமை உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இருந்தபோதிலும் ஜே .வி.பி யின் பொய் வாக்குறுதிகளுக்கும் அதன் மாயத்தோற்றத்துக்கும் ஏமார்ந்து எமது மக்களில் சிலர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்து தற்போது அவர்களின் உண்மையான முகத்தை அடையாளம் காணத்தொடங்கியுள்ளார்கள்.
உறுதியளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் நடைமுறையில் இருக்கிறது. எமது அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றார்கள். அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவில்லை. மாறாக பல்லாயிரக்கணக்கான காணிகளை மேலும் அபகரிப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்.
தமிழ் மக்கள் அதிகார பகிர்வை நிராகரித்துவிட்டார்கள் என்று சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படையாகவே கூறி வந்த அரசாங்கத்தினர் இனியாவது தமது கருத்துக்களைத் திருத்திக் கொள்வார்களாக.
ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக வடக்கு -கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக தாயகம், எம்மை நாமே தான் ஆளவேண்டும் மாற்றானுக்கு இங்கு இடமில்லை என்று மக்கள் தெளிவான செய்தியை சொல்லியுள்ளார்கள்.
நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் எஞ்சியிருக்கும் சில எச்சங்களையும் துடைத்தெறிய தயாராகுங்கள்; ஆனால் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமோ என்பது சந்தேகமாகத்தான் இருக்கின்றது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


