முல்லைத்தீவு விவசாய கிராமத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்பு!
முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளும் சிறுவன் ஒருவனும் இன்று (01.12.2025) மீட்கப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வெள்ளநீர் காரணமாக முல்லைத்தீவின் குமுளமுனை, நீத்தகாய் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் குழு மற்றும் இளைஞர்கள் குழுவால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
'டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கனமழையிலிருந்து தங்கள் விவசாய நிலங்களை காப்பாற்ற சென்ற விவசாயிகள் குழு, திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக தங்கள் விவசாய நிலங்களில் சிக்கித் தவித்தனர்.

தொலைபேசி சமிக்ஞைகள் தடைபட்டதால் நிவாரணப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதன் காரணமாக விவசாயிகளின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்து நிவாரணக் குழுக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக நிவாரணப் பணியாளர்களும் வர முடியாத நிலையில், இளைஞர்கள் முல்லைத்தீவு வேளாங்கண்ணி கடற்றொழில் சங்க உறுப்பினர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி, படகுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
கடற்றொழில் படகுகள் விவசாய நிலங்களுக்குத் தேடிச் சென்றபோது, ஏழு மீனவர்களும் அவர்களுடன் இருந்த 14 வயது சிறுவனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |