தியாகங்களை செய்ய வேண்டும் மக்கள் -அமைச்சர் வெளியிட்ட அபாய அறிவிப்பு
ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் மேலும் வங்குரோத்து நிலையினை அடையலாம் என ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella)எதிர்வுகூறியுள்ளார்.
கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவரிடம், ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து செயற்படுவதால், நாடு முடக்கப்படும் எனவும் இதனால் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருகின்றோம். மக்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் கட்டுப்பாடுகளை மீறி நடப்பார்களாயின் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பாதிப்படையும். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை் அரசாங்கத்தை மட்டுமல்ல கட்சி, அமைப்புக்கள் எல்லாவற்றையும் பாதிப்படையச் செய்யும்.
இன்று எதிர்க்கட்சியினர் தமக்கான கடமைகளை பொறுப்புகளை மறந்து மக்களை ஒன்றுதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கொரோனாத் தொற்றுத் தான் அதிகரிக்கும். இது நாட்டை நேசிக்கும் செயற்பாடு அல்ல.
மாறாக கொரோனாவை அதிகரிக்கச் செய்யும் செயலாகப் பார்க்கின்றோம். தற்போது பல உலக நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவர்கள் நாடுகளை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.