சாரதி அனுமதிப்பத்திரங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க (Kamal Amarasinghe) தெரிவித்துள்ளார்.
தற்போது அட்டை விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 240,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் அனைவருக்கும், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் நிரந்தர அட்டைகளை அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள்
அட்டை தட்டுப்பாடு காரணமாக சுமார் 4.5 இலட்சம் பேருக்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

இதில் எஞ்சியுள்ள 210,000 அட்டைகளும் பெப்ரவரி இறுதிக்குள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என கூறினார்.
பொதுவாக மாதத்திற்கு 60,000 முதல் 80,000 புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படுகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது போதியளவு அட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் அட்டை தட்டுப்பாடு ஏற்படாது என ஆணையாளர் நாயகம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |