டிப்பர் வாகனம் பழக்கடைக்குள் மோதியதில் ஒருவர் பலி
வவுனியா, சாலம்பைக்குளம் பகுதியில் பழக்கடையில் லொரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (02.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வவுனியா மன்னார் பிரதான வீதிக்கு அருகிலிருந்த பழ விற்பனை நிலையமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒருவர் பலி
இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |