சிறுமி மீதான அத்துமீறல் வழக்கு! 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை
கடுமையான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டின் கீழ் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
மருத்துவ ஆதாரங்கள் மற்றும் வழக்கின் பிற சூழ்நிலைகள் சந்தேக நபரின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால், அவரை விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமோது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இருவர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
பாலியல் தொற்றுநோய்கள்
பாதிக்கப்பட்ட 13 வயதுச் சிறுமிக்கு ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 2 (பாலியல் உறுப்பு ஹெர்பெஸ் தொற்று) காணப்பட்டதாக மருத்துவச் சான்றுகள் சுட்டிக்காட்டின.

சிறுமிக்கு ஏற்பட்ட இந்தத் தொற்று, குற்றம் சாட்டப்பட்டவரால் தான் ஏற்பட்டது என அரசுத் தரப்பு வாதிட்டது.
எனினும், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட பாலியல் தொற்றுநோய்கள் குறித்த மருத்துவ பரிசோதனை மற்றும் பாலியல் நோய் நிபுணரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பரிசோதனையின் போது அவருக்கு எந்தவிதமான பாலியல் தொற்றுநோய்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், சிறுமியின் மருத்துவ நிலையையும், குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு மீது பலத்த சந்தேகம் எழுகிறது என்று நீதியரசர் சுமோது பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.
கணிசமான முரண்பாடு
அத்துடன், எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி இந்த முக்கியமான மருத்துவ அறிக்கையைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஆரம்பத்தில் காவல்துறையிடமும் நீதி மருத்துவ அதிகாரியிடமும் அளித்த வாக்குமூலங்களுக்கும், நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்திற்கும் இடையே கணிசமான முரண்பாடுகள் இருந்தமையையும் நீதிமன்றம் கவனத்திற்கொண்டது.
சம்பவம் நடந்த சூழல் மற்றும் இந்த சம்பவத்தை உடனடியாக வெளியில் தெரிவிக்க விடாமல் தடுத்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்த கூற்றுகளிலும் வேறுபாடுகள் இருந்தன.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திற்கும் சிறுமியின் குடும்பத்துக்கும்; இடையே நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாகவே இந்த பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கலாம் என்ற எதிர்த்தரப்பின் வாதத்தையும் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
இந்தநிலையில்,ஒருவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர்" என்ற சட்டக் கோட்பாட்டின்படி, அரசுத் தரப்பால் இந்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்த முடியாததால், அதன் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்கே சேர வேண்டும் எனக்கூறி மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்த்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |