பேருந்தில் பயணித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி
இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சென்றவர்கள்
அலவ்வ காவல்துறை பிரிவிற்குட்பட்ட மொரவலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் இன்று (24) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வீதியில் சென்றவர்களுக்கும், பேருந்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்த குழுவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டனர்
அப்போது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வீதியிலும் பேருந்தின் உள்ளேயும் இருந்த சுமார் 06 பேர் குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அஹலியகொட, பின்தெனிய, தியஹொடல்ல, பிலிவலகன மற்றும் மல்மடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.