விடுவிக்கப்பட்ட காணிகளுக்காக உரிமம் கோரும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் : மறுக்கும் காணி உரிமையாளர்கள்
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தனியார் காணி ஒன்றினை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வருக்கின்றமையால், காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றின் மீதே பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது உரிமம் கோரியுள்ளது.
குறித்த காணியானது கடந்த 33 ஆண்டுகளிற்கு அதிகமாக மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்ததாவும், மாங்கொல்லை பகுதியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி, எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மோசடியாக அபகரித்து
இவ்வாறிருக்கையில் இன்று (26) பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து , இந்த காணிகள் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது , நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து இந்தக் காணிகளை கொள்வனவு செய்துள்ளோம் எனக்கூறியுள்ளனர்.
இந்நிலையில், காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என காணி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் அந்தக் கருத்துக்களை ஏற்காமல் இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாகக் கூறி, இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு காணி உறுதியைக் காண்பித்து , உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.
இந்த காணிகளை நாங்கள் கொள்வனவு செய்துள்ளோம், அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது, அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் எனக்கூறி அங்கிருந்து சென்றுள்ளனர்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது என்றும் அது எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறுக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே , அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு விட்டார்களா, அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா என்று காணி உரிமையாளர்கள் தமது சந்தேகத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இனி அதிகாரிகள் திரும்பி வந்தால் தான் எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அந்த காணி உரிமையாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.