முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பித் துண்டு..! பிரபல உணவகத்துக்கு எதிராக குற்றச்சாட்டு
பிரபலமான உணவகமொன்றில் சிறு குழந்தையொன்றுக்காக வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி காணப்பட்டதாக முட்டை ரொட்டியை கொள்வனவு செய்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) மன்னார் - பள்ளிமுனைப் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அப்பகுதியில் வசிக்கும் குறித்த பெண், தனது சிறு குழந்தைக்காக குறித்த உணவகத்தில் முட்டை ரொட்டி ஒன்றை வாங்கியதாகவும், அதனை உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில் உணவுக்குள் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கோரிக்கை
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறையினருக்கு உடனடியாக தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சம்பவம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நகரசபை அல்லது பொது சுகாதார பரிசோதகர் தரப்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறித்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறு குழந்தைக்காக வாங்கப்பட்ட உணவில் இரும்புத் துண்டு காணப்பட்டதாக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், உணவகங்களில் பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |