இராட்சத அலை இழுத்துச் சென்ற சிறுவனை நடுக்கடலில் காப்பாற்றிய பிள்ளையார்
இராட்சத கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனை பிள்ளையார் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியிலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட சிறுவன் 14 வயதே ஆன லக்கான் தேவி புஜக் என்பவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 29-ம் திகதி மாலை அங்குள்ள துமாஸ் கடற்கரைக்கு பாட்டியுடன் சென்றுள்ளான் சிறுவன். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், ஆர்வமிகுதியில் கடற்கரையில் இருந்து கடலை நோக்கி சென்றுள்ளான். அவனது பாட்டி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கடலின் இடுப்பளவு தண்ணீர் வரை லக்கான் சென்றுள்ளான்.
திடீரென அடித்துச் சென்ற இராட்சத அலை
அப்போது அங்கு திடீரென வந்த இராட்சத அலை ஒன்று சிறுவனை இழுத்துச் சென்றது. இதை பார்த்து அவரது பாட்டி போட்ட கூச்சலை அடுத்து அங்கிருந்த மீனவர்களும், இளைஞர்களும் கடலில் குதித்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, தீயணைப்புப் படையினரும் கடலுக்குள் சென்று தேடி பார்த்த போதும் சிறுவன் லக்கான் இல்லை. இதனால் அவர்கள் சிறுவன் இறந்துவிட்டான் என்ற முடிவுக்கே வந்தனர். இதை கேட்டு அவனது குடும்பத்தினரே கதறி அழுதனர்.
காப்பாற்றிய பிள்ளையார்
இந்நிலையில், அடுத்த நாள் 30-ம் திகதி மதியம் ரசீக் டாண்டெல் என்ற மீனவர், மீன்பிடிப்பதற்காக தனது படகை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 19 கடல் மைல் தூரம் அவர் சென்ற போது, யாரோ மிதப்பது போல அவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அவர் அங்கு சென்று பார்த்த போது அங்கு ஒரு சிறுவன் ஒரு கட்டையை பிடித்து மிதந்து கொண்டிருந்தான். அரை மயக்கத்தில் இருந்த அவனை மீட்டு, மீனவர் விசாரித்த போது அவன்தான் மாயமான லக்கான் என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த சிறுவன் பிடித்திருந்த கட்டையை பார்த்த போது, அது கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலையின் அடிப்பாகம் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்நது, அந்த சிறுவனை அவர் மீட்டு கரைக்கு கொண்டு வந்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தார். இறந்துவிட்டதாக கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததை அறிந்து அவனது பெற்றோரும், உறவினர்களும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். பின்னர் வந்து அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.