நான் நிரபராதி : கைதுக்கு முன்னர் பிள்ளையான் வழங்கிய கடைசிச் செவ்வி
ஜனாதிபதியினையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினையும் முட்டாள்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) (Sivanesathurai Chandrakanthan ) கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது.
ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார் ?
தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை சி.ஐ.டியின் தலைவராக பணியாற்றினார்.
ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள், அவர்களுக்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும் ஐ.எஸ். மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா ?
நான் ஆயுதப் போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன்.
2015 முதல் 2020 வரை சிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும்.
ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம்.
நான் சி.ஐ.டியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி போலியான கட்டுக்கதைகளை உருவாக்கியமைக்காக ஆசாத்மௌலானவை கைது செய்ய உதவுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
