பிள்ளையானிடம் கேட்ட ஒரே கேள்வி : வாயடைத்துப்போன அவர்
பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினருக்கு புலனாய்வுப் பிரிவினர் மாதம் 3.5 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, இன்னமும் பணம் கொடுக்கப்படுகின்றதா என பிள்ளையானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினரின் கணக்கிலிருந்து பிள்ளையானின் குழு பராமரிக்கப்பட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதும் பணம் வழங்கப்படுகிறதா..!
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களும், பிள்ளையான் போன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்களும் தற்போது அரசாங்கத்தில் இருப்பதாக திஸாநாயக்க குற்றம் சுமத்தியதை அடுத்து, பிள்ளையானுடன் இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
“உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் உளவுப் பிரிவுகள் மாதம் ரூபா 3.5 மில்லியன் பணத்தை தந்தது. உங்களுக்கு இன்னும் அந்த பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் திஸநாயக்க பிள்ளையானிடம் கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 அம்பலப்படுத்திய விடயங்கள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய திஸநாயக்க, ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்தை இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என்றார்.
குற்றவாளிகள் அனைவரும் அரசுடன்
“அன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எஸ்ஐஎஸ் போன்ற புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் போன்ற தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய தரப்பினர் அரசாங்கத்துடன் உள்ளனர்.
குற்றம் செய்த பிள்ளையான், கோட்டாபய ராஜபக்ச போன்றவர்களும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே, நியாயமான விசாரணையை எப்படி எதிர்பார்க்க முடியும்,'' என அவர் கேள்வியெழுப்பினார்.