நடுவானில் தூங்கிய விமானிகள் : பயணிகளின் நிலை..!
விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த இரண்டு விமானிகள் விமான பயணத்தின் போது தூங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பிரபல விமான சேவை நிறுவனமாக கருதப்படும் 'பாட்டிக் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 'ஏ320' ரக பயணிகள் விமானத்தின் இரு விமானிகளே தூங்கியவர்களாவர்.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தலைநகர் ஜகார்த்தா விமான நிலையத்துக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் இரண்டு விமானிகளுடன் 153 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
விமானியின் தூக்கத்தால் தடம்மாறிய விமானம்
விமானி தூங்கியதால், விமானம் திட்டமிட்ட பாதையில் இருந்து சிறிது நேரம் விலகி வேறு திசையில் பறந்தது. எனினும், விமானி அறையில் அவசர சைரன்கள் ஒலித்ததையடுத்து, உடனடியாக விழித்த விமானிகள், விமானத்தை சரியான திசையில் பறக்கவிட்டு, பின்னர் ஜகார்த்தா விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதுடன், விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்தோனேசிய ஊடகங்கள் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளன.
32 வயதான தலைமை விமானி, விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு, தான் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்குமாறும் துணை விமானியிடம் கூறியது விசாரணையில் தெரியவந்தது.
மனைவிக்கு இரட்டை குழந்தைகள்
துணை விமானி தலைமை விமானியின் கருத்துக்கு இணங்கியபோதிலும் பின்னர் தூங்கிவிட்டார்.
விசாரணையில், தனது மனைவிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் மனைவிக்கு ஆதரவாக இருந்ததால், மறுநாள் சரியாக தூக்கம் வரவில்லை என்றும், அதனால் தான் தூங்கிவிட்டதாகவும் துணை விமானி சாக்கு கூறினார்.
எவ்வாறாயினும், இரண்டு விமானிகளின் சேவையை இடைநிறுத்துவதற்கு Batik Air நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |