கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம் : சாரதிகள் அவதானம்
கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிக்க காவல்துறையினரால் புதிய சி.சி.ரி.வி. கண்காணிப்பு கட்டமைப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறையானது இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
அதன்படி இன்று முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமரா மூலம் கண்காணிப்பு
இதேவேளை கொழும்பிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் 108 சி.சி.ரி.வி. கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கொழும்பிற்குள் நுழையும் 9 இடங்களிலும் சி.சி.ரி.வி. அமைப்பு செயற்பாட்டில் உள்ளதாக சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இந்த நடைமுறையின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல்துறை பிரிவின் ஊடாக அதற்கான தண்டப்பணம் அறிவிடப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கெமுனு விஜேரத்ன எதிர்ப்பு
இதேவேளை குறித்த திட்டத்தின் ஊடாக போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளுக்கு அபராதப் பத்திரங்களை வீட்டுக்கு அனுப்பும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வேலைத்திட்டத்திற்கு பேருந்துகளை ஒழுங்குபடுத்தினால் பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பேருந்து செல்லும் பாதையில் முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்கள் பயணிப்பதால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |