அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்ச..! திட்டமிட்ட காய் நகர்த்தலில் பெரமுன
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது சம்பந்தமாக பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்ச
இதனிடையே அடுத்த அதிபர் தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் அரசியல் திட்டத்துடன் மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் என்ன நடந்திருந்தாலும் தற்போது மக்கள் பொதுஜன பெரமுனவுடன் இருக்கின்றனர் என்ற திடமான நம்பிக்கையில் பொதுஜன பெரமுனவினரால் இந்த அரசியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய அதிபரை பயன்படுத்தி இன்னும் சிறிது காலம் ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுத்து விட்டு, அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவு பெற்ற பொது வேட்பாளராக நாமல் ராஜபக்ச நிறுத்த பொதுஜன பெரமுன காய்களை நகர்த்து வருகிறது.
எனினும் நாமல் ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சிக்கு அந்த கட்சிக்குள் சிலர் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச இன்னும் பக்குவப்பட வேண்டும்
அதிபர் பதவி போன்ற மிகவும் பொறுப்பான பதவிக்கு நாமல் ராஜபக்ச இன்னும் பக்குவப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் மக்கள் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்து அவர்களில் ஒருவரை மீண்டும் அதிபர் பதவிக்கு தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.