தோட்டதொழிலாளர்களின் சம்பள பிரச்சினை: பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மலையக மக்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, வேறு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென அவர் கூறியுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளம்
மலையக மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்து, கடந்த 1 ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க முடியாதென பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டக் காணிகளை குத்தகைக்கு எடுத்த சுமார் 24 பெருந்தோட்டக் நிறுவனங்கள் உள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த நிறுவனங்களுள் எவரேனும் அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்த முடியாது என தெரிவித்தால், தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்க நிதி அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |