அதிபர் ரணிலை படுகொலை செய்ய சூழ்ச்சி - காவல்துறை தலைமையகம் விளக்கம்!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும், குற்றப் புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தனியார் ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த செய்தி தொடர்பில் காவல்துறை தலைமையக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் விளக்கம்
அந்தவகையில்,
இரண்டு வாரங்களுக்குள் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும், குற்றப் புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தனியார் ஊடகம் ஒன்று செய்தி பிரசுரித்திருந்தது.
குறித்த இணையத்தளத்தில் வெளியான செய்தியானது பொய்யானதும், முழுமையாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும் என காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தள செய்தியில் சொல்லப்பட்டதை போல அதிபர் ரணிலை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகள் தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இதுவரை கிடைக்கவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

