இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை
இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
13ஆவது திருத்தச்சட்டம்
அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது.
இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
நரேந்திரமோடி வலியுறுத்தல்
இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,
தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு
இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக, வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |