ஜி-20 சர்வமத மாநாட்டில் உரையாற்றவுள்ள சிறிலங்கா பிரதமர்!
இத்தாலி போலோக்னாவில் இன்று நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ சிறப்பு உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
ஜி-20 சர்வமத மாநாடு செப்டெம்பர் 12 இன்று போலோக்னா நகரில் ஆரம்பமாகவுள்ளது.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய பிரதமர் இத்தாலிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
'கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்' எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.
குறித்த விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இராஜதந்திர சந்திப்பின் போது இத்தாலி ஜனாதிபதி மரியோ ட்ராகி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி பொருட் பாஹோர் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார் எனவும் மேலும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜி-20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.