காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது: ஆளும் கட்சி எம்பி பகிரங்கம்
நாட்டில் சட்டத்தைச் செயற்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த (Premnath C. Dolawaththa) தெரிவித்துளளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ”காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு சிறந்ததாகக் காணப்பட்டாலும், ஒருசில குறைபாடுகளும் காணப்படுகின்றன.
யுக்திய நடவடிக்கை
யுக்திய சுற்றிவளைப்பை முன்னிலைப்படுத்தி ஒருசில காவல்துறையினர் முறையற்ற வகையில் செயற்படுகின்றார்கள். கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு சட்டத்தை காவல்துறையினருக்கு கையில் எடுக்க முடியாது. அவர்கள் தமது வரையறைக்கு அப்பாற்பட்டுச் செயற்படும் போது பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இவ்வாறான காரணிகளால் தான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காவல்துறையினரின் செயற்பாடுகளை விமர்சிக்கின்றது. ஒருசில காவல்துறையினரின் முறையற்ற செயற்பாடுகள் பால் குடத்தில் ஒரு துளி விசம் கலந்தது போல் மாறி விடுகிறது.
ஆகவே யுக்திய சுற்றிவளைப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படும் காவல்துறையினர் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், காவல்துறைமா அதிபரும் விசேட கவனம் செலுத்த வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |