பாரிய போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய படுகொலை சதித்திட்டம் முறியடிப்பு!
சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேகநபர்களை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிரிந்த, அந்தகல்வெல்ல கடற்பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை அத்தியட்சகரின் வீடு
காவல்துறை உளவாளி ஒருவர் வழங்கிய துல்லியமான புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பழிவாங்கும் வகையில், வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘ரூபன்’ மற்றும் ‘அங்கொட பிரியங்கர’ என அடையாளம் காணப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள், குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரைக் கொலை செய்த பின்னர், தலையை துண்டித்து உதவி காவல்துறை அத்தியட்சகர் ரோஹன் ஒலுகலவின் வீட்டுக்கு முன்பாக விட்டுச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட கொலைத் திட்டம் தோல்வியடைந்த பின்னர், கடந்த 5ஆம் திகதி காவல்துறை ஜீப் வாகனத்தைப் போன்ற போலி ஜீப் ஒன்றில் வந்த குழுவினர், குறித்த உளவாளியை வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது
குறித்த குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனம், கடுவெல – ஹேவாகம பகுதியில் உள்ள ஒரு வாகன திருத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வருகை தந்ததாகக் கூறப்படும் இரண்டு கூலிக் கொலையாளிகள், செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 41 வயதான மதுக சாமர எனப்படும் மதுவா மற்றும் இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நலின் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த காவல்துறை உளவாளியை கொலை செய்து தலையை துண்டிப்பதற்காக தயாராக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு மன்னா கத்திகளும், போதைப்பொருள் தொகையொன்றும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |