யாழில் இருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரி மாங்குளத்தில் கைது
மாங்குளத்தில் கஞ்சாவுடன் கைதான காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
24 அன்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக மாங்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏ9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட காவல்துறையினர் 6 கிலோ கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள்.
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளத்தினை சேர்ந்த 34 அகவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நொச்சிகம பகுதியினை சேர்ந்த 25 அகவையுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 அகவையுடை நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட மாங்குளம் காவல்துறையினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை இவர்களை எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.