நிட்டம்புவ பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம்: மூவர் கைது!
நிட்டம்புவ பிரதேசத்தில் கட்டளையை மீறி பயணித்த வான் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் வானில் பயணித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கம்பஹா காவல்துறை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு, நிட்டம்புவ - கட்டுநாயக்க வீதியில் உதம்விட சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போது, வேயங்கொடையிலிருந்து நிட்டம்புவ பிரதேசத்தை நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் வான் ஒன்று பயணித்துள்ளது.
மூவர் கைது
இந்த வேனை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், கட்டளையை மீறி குறித்த வான் தொடர்ந்தும் பயணித்துள்ளது.
பின்னர், காவல்துறையினர் வேனை துரத்திச் சென்று T -56 ரக துப்பாக்கியால் வானின் முன் மற்றும் பின் வலது சக்கரங்களில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, வானில் பயணித்த மூன்று பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் அதிகளவில் குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
வேனின் சாரதி லெல்லொபிட்டிவைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய இருவரும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதிக்க சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
