காவல்துறை காவலில் இருந்த இளைஞன் மரணம் : மயானத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
வெலிக்கடை (Welikada) காவல்துறை காவலில் இருந்தபோது உயிரிழந்த சத்சர நிமேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் கடும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய (Kandaketiya) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் காவல்துறை காவலில் இருந்த போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, மறுநாள் (02.04.2025) அதிகாலையில், சந்தேகநபரான இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை பாதுகாப்பு
அத்துடன், உயிரிழக்கும் போது இளைஞனின் உடலில் இருந்த காயங்கள் தானாக ஏற்படுத்தியவை என்றும், அந்த நேரத்தில் அந்த இளைஞர் நிலையான மனநிலையில் இருக்கவில்லை என்றும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பல தரப்பினரின் எதிர்ப்பு எழுந்த சூழலில், சத்சாராவின் பிரேத பரிசோதனையில் திருப்தி அடையவில்லை என்று அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தனர்.
அதன்படி, 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞனின் உடல் நாளை (11.04.2025) தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில் நேற்று (09.04.2025) இரவு முதல் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
