பாதுகாப்பு அமைச்சரின் மகனிடமே இலஞ்சம் கேட்ட சிறிலங்கா காவல்துறை
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனிடமே போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர் இலஞ்சம் கேட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கண்டி, கலகெதர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போக்குவரத்து விதிகளை மீறியதால்
அமைச்சரின் மகன், கண்டிக்கு செல்லும் வழியில், வாகனத்தை முந்திச் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் மகன் போக்குவரத்து விதிமீறலை ஒப்புக்கொண்டு, வழங்கப்பட்ட அபராதத் தாளை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அமைச்சரின் மகன் அபராதம் செலுத்த அருகில் உள்ள தபால் நிலையத்தை விசாரித்ததாக கூறப்படுகிறது.
இலஞ்சம் கேட்ட காவல்துறை அதிகாரிகள்
எனினும், தண்டப்பணத்தை எழுதும் அதிகாரி, அமைச்சரின் மகனுக்கு தமக்கு உதவுவதன் மூலம் தபால் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கலாம் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் மகன் தான் என காவல்துறை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து தான் செய்த குற்றத்துக்கான அபராதத் தாளைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து, அமைச்சரின் மகனிடம் அபராதம் செலுத்துவதற்காக 1,100 ரூபாயை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறையின் மோட்டார் சைக்கிள் மூலம் அஞ்சலகத்திற்கு சென்று அபராதம் செலுத்தி, அதற்கான ரசீதை அமைச்சரின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
