ரணிலுடனான பேச்சுக்கு முந்திய கண்துடைப்பு அம்பலம்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவித்த விடயம், சர்வதேச அரங்கிற்கான கண்துடைப்பு என்ற விடயம் அம்பலமாகியுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் தான் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவிய போது, அவர் “நீங்கள் விரும்பினால் சந்திப்போம்” எனத் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.
சந்திப்பு தோல்வி
இது ஒருபுறமிருக்க அதிபர் ரணிலுடனான பேச்சுக்களில் பங்கெடுக்க முன்னர் தமிழ் தேசியக் கட்சிகள் தமக்கு இடையில் சந்தித்து பேச்சுக்களை நடத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெறவிருந்த சந்திப்பும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
குறித்த கூட்டத்திற்கு வடக்கு கிழக்கின் அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் மாத்திரமே கலந்துக்கொண்டிருந்ததாகவும், மற்றுமொரு நாளில் இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்த நிலையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிபந்தனை விதித்துள்ளது.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி கட்டமைப்பிலான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கினால் மாத்திரமே அவருடனான பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
