இழப்பீடு பெறுவதிலும் சுத்து மாத்து செய்யும் அரசியல்வாதிகள்
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற காலி முகத்திடல் போராட்டத்தின் போது நாடளாவிய ரீதியில் அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து நாசம் செய்தமை தொடர்பிலான இழப்பீடுகளை அரசாங்கம் வழங்க ஆரம்பித்துள்ளது.
அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அசையா சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை ஆரம்ப கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
15 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு

இதன்படி, அழிக்கப்பட்ட அசையா சொத்துக்களுக்காக கடந்த அரசாங்கத்தின் கிட்டத்தட்ட 15 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட 72 அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அழிக்கப்பட்ட சொத்து வீடுகள் மற்றும் பொருட்களின் மதிப்பை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பல சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது.
குழுக்கள் மூலம் உரிய அறிக்கைகள் வழங்கப்பட்டு, அதற்கேற்ப இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சுத்து மாத்து செய்யும் அரசியல்வாதிகள்

அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களை மதிப்பிடும் போது பெறுமதி கூடிய விலைகளை வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இடிந்த கட்டடங்களுக்கு இழப்பீடும், இரண்டாம் கட்டமாக சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும்.
சில அரசியல்வாதிகள் தமது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக பெருமளவிலான காப்புறுதி இழப்பீடுகளை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.