வடகிழக்கில் அரசியல் செய்வதைப் போல் புத்தளத்தில் அரசியல் செய்ய முடியாது - அலிசப்ரி ரஹீம்
வடகிழக்கில் அரசியல் செய்வதைப் போல புத்தளம் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது.என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம்(Ali Sabri Raheem) தெரிவித்துள்ளார்.
2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை மற்றும் அ.இ.ம.கா கட்சியால் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால் கட்சியிலிருந்து என்னை இடைநிறுத்தியுள்ளதாக வாட்சப் மூலம் அறிவித்தார்கள் எனினும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை
அவ்வாறு எழுத்து மூலம் அறிவித்து ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தால் 2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தேன் என்று எனது பக்க நியாயங்களை தெளிவுபடுத்துவேன்.
மக்களுக்கு பணியாற்றவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானேனே தவிர, எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகளை பெறுவதற்கு அல்ல.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே மக்களுக்கும், என்னுடைய மாவட்டத்திற்கும் பணியாற்ற முடியும் என்ற எதிர்பார்ப்பில் பலருடன் ஆலோசனைகளை பெற்று அரசுக்கு ஆதரவு வழங்கி இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளேன்.
கடந்த தேர்தல் காலங்களில் புத்தளத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் பெரும்பான்மை உறுப்பினர்கள் எமது மக்களின் நலன்கள், அபிவிருத்தி விடயங்களில் அக்கறை செலுத்தினாலும் எமது மக்களுடைய தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.
எமது புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு நிறையத் தேவைகள் காணப்படுகின்றன.
ஆகவே, எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவும் முடியாது. இதுதொடர்பில் எமது கட்சிக்கு நான் பல தடவைகள் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
கட்சி எடுக்கும் தீர்மானம் பற்றி எந்த ஆலோசனைகளும் நாடாளுமன்ற உறுப்பினரான எம்மை அழைத்து கேட்பதில்லை. தீர்மானம் எடுத்த பின்னர் முடிவை மாத்திரமே அறிவிக்கிறார்கள்.
புத்தளம் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துதான் எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறார்கள். எனவே, புத்தளம் மக்களின் எதிர்பார்ப்புக்களை இந்த அரசாங்கத்தின் மூலம் நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுப்பேன் என மேலும் தெரிவித்துள்ளார்.