தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டாதே! கிழக்கில் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலரும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அதன் போது விடுதலை செய், விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டாதே, கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மற்றும் இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தலைவர் கதிர்.பாரதிதாஸன், கிழக்கு மாகாண சூழலியல் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ரஜனி ஜெயப்பிரகாஸ், சிவில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.சீலன், சர்வ மத அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் ஒன்றிணைந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.