இலங்கை அணியின் மோசமான ஆட்டம்: நிர்வாகத்தை சாடிய முன்னாள் அமைச்சர்
தற்போது நடைபெற்று வரும் ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் மோசமான ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் (SLC) அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“ கிரிக்கெட் வீரர்கள் திறமையான வீரர்கள், அவர்கள் மீது தாம் ஒருபோதும் குற்றம் சாட்ட மாட்டேன். இதற்கு கிரிக்கெட் வாரியம் தான் பொறுப்பேற்க வேண்டும். முறையான நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டால், கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பது சாத்தியமில்லாத காரியம் அல்ல.
மோசமான நிலை
இந்நிலையில், விளையாட்டு அமைப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே செயற்பட்டிருந்தால், உலகக் கோப்பையில் இலங்கையால் இவ்வாறான மோசமான நிலையை தவிர்த்திருக்க முடியும்.
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த, கிரிக்கெட் வாரியத்தை தடை செய்தாலும், ஊழல் அதிகாரிகளை நீக்கினாலும் பரவாயில்லை. அணி தொடர்ந்து விளையாட வேண்டும். இருப்பினும், மக்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், கிரிக்கெட்டை மேம்படுத்தும் எண்ணம் இல்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் கிரிக்கட் விளையாட்டை சீர்செய்வதற்கு புதிய விளையாட்டுச் சட்டத்தின் அவசியத்தை முன்னாள் விளையாட்டு அமைச்சர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |