பாப்பரசரின் இறுதி ஆராதனை : வத்திக்கானுக்கு புறப்பட்ட விஜித ஹேரத்
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) வத்திக்கானுக்கு (Vatican) பயணமாகியுள்ளார்.
இன்று (25) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அமைச்சர் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் வத்திக்கானுக்கு பயணிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று மாலை இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன (Kavinda Jayawardena) மற்றும் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) ஆகியோர் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.
இறுதி மரியாதை
இலங்கையின் கத்தோலிக்க அரசியல் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இணைந்து கொள்ளவுள்ளனர்.
புனித பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை நாளை (26) உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.
88 வயதான புனித பிரான்சிஸ், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறினார்.
இதேவேளை திருத்தந்தையின் இறுதி ஆராதனை நடைபெறும் நாளைய தினம் (26) இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
