கனடாவில் அநீதி இழைப்பு! மன்னிப்பு கோரவுள்ள பரிசுத்தப் பாப்பரசர்
தீவினை செய்தமை தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் பயணத்தை மேற்கொண்டு தாம் கனடா வந்துள்ளதாக பரிசுத்தப் பாப்பரசர் பிரான்ஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு வந்த தங்கி கல்வி கற்கும் பாடசாலை கட்டமைப்பில் பழங்குடியின மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட நிலையில், அந்த மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு அவரின் கனடாவிற்கான இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
கனடாவிற்கான ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அல்பேர்ட்டாவின் எட்மண்டன் நகரை பரிசுத்தப் பாப்பரசர் சென்றடைந்திருந்தார்.
எட்மண்ட் சர்வதேச தரையிறங்குவதற்கு முன்பு, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாப்பரசர், கனடாவிற்கான ஆறு நாள் விஜயத்தை கவனமாக கையாள வேண்டும் எனக் கூறியிருந்தார்.
பரிசுத்தப் பாப்பரசர், எட்மண்டன் தவிர கியூபெக் நகரம் மற்றும் ஈக்கலூயிட் ஆகிய இடங்களுக்கு பயணிக்கவுள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்களின் ஒடுக்குமுறைக்கு பாப்பரசர் வருத்தம்
கடவுளின் கிருபையுடன், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பயணத்திற்கு எனது பயணம் பங்களிக்கும் என்று நம்புகிறேன். பிரார்த்தனையுடன் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள் என பரிசுத்தப் பாப்பரசர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எட்மண்டன் விமான நிலையத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளுநர் நாயகம் மேரி சைமன், ஏனைய தேவாலய தலைவர்கள், பழங்குடியினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸ்சை வரவேற்றிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது பழங்குடியின தலைவர்கள் மற்றும் தங்கி கல்வி கற்கும் பாடசாலை கட்டமைப்புகளில் இருந்து உயிர்தப்பியவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
மன்னிப்பு கோரவுள்ள பரிசுத்தப் பாப்பரசர்
அத்துடன் தங்கி கல்வி கற்கும் கட்டமைப்பில் பழங்குடியின பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பரிசுத்தப் பாப்பரசர் மன்னிப்பு கோரவுள்ளார்.
கனடாவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பழங்குடியின குழந்தைகள் தங்கி கல்வி கற்கும் பாடசாலையில் வலுக்கட்டயமாக இணைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அங்கு புறக்கணிப்பு , உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், இந்தப் பாடசாலைகளில் 60 வீதமானவை கத்தோலிக்க திருச்சபையின் கீழ் இருந்தன.
ஆறு நாள் விஜயத்தை நிறைவுசெய்து, எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை பரிசுத்தப் பாப்பரசர் இத்தாலியின் ரோம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
