போராட்டம் திரைப்படம்! ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு புதிய நம்பிக்கை
நீண்ட காலமாக வளர்ச்சியின்றி காணப்பட்ட ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ‘போராட்டம்’ திரைப்படம் அமைந்துள்ளதாக உலகப் புகழ்பெற்ற இலங்கையின் தமிழ் வானொலி அறிவிப்பாளர், ஊடகவியலாளர், மேடை நிபுணர் பி. எச். அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
1962ஆம் ஆண்டு தொடங்கிய ஈழத்துத் தமிழ்த் திரைப்படப் பயணம், தாயகத் தமிழ் ரசிகர்களின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெற முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது ‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் ஈழத் தமிழ்த் திரையுலகம் நெஞ்சை நிமிர்த்தி நடைபோடத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தின் ஒளிப்பதிவு குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ள அவர், ஒளிப்பதிவாளர் AK Kamal, அகன்ற திரையில் தெளிவான மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளை சிறப்பாகப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுக் காட்சிகள்
குறிப்பாக, கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களையும் திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் தூண்டும் வகையில் விளையாட்டுக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டிருந்தாலும், இன்றைய இளைய தலைமுறையை பாதித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனைப் பயன்படுத்தி பெருமளவில் பணம் சம்பாதிக்கும் பிரமுகர்களின் இரட்டை நிலைப்பாடு ஆகிய சமூகப் பிரச்சினைகளையும் திரைப்படம் பேசுவதாக அவரது விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்திற்கு தேவையான சமூகக் கருத்தை திரைப்படம் முன்வைத்துள்ளதாகவும், இயக்குநர் ராஜ் சிவராஜுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் இயல்பாக நடித்திருப்பது சிறப்பம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவனாகப் பார்த்த றீகன், தற்போது வளர்ந்து இளைஞனாக மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.
‘போராட்டம்’ திரைப்படத்தின் மற்றுமொரு முக்கிய சிறப்பம்சமாக இசை, குறிப்பாக பின்னணி இசை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் பூவன் மதீசன், தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசையை பயன்படுத்தி, பல காட்சிகளில் அமைதியான பின்னணியை விட்டிருப்பது அனுபவமிக்க இசையமைப்பாளர்களிடம் காணப்படும் பக்குவத்தை வெளிப்படுத்துவதாகவும் அப்துல் ஹமீத் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ரசிகர்களின் ஆதரவு
இந்தத் திரைப்படம் தமிழகத் திரைப்படங்களுடன் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்படவில்லை என்றும், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ் ரசிகர்களை மையமாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் பாஸ்கரன் கருதியிருப்பதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக அதிகாலை காட்சிகளுக்குக் கூட முன்கூட்டியே பதிவு செய்து, சில சந்தர்ப்பங்களில் பயணம் மேற்கொள்ளும் தமிழ் ரசிகர்கள், ஈழத் தமிழ்த் திரைப்படங்களுக்கும் அதேபோன்ற ஆதரவை வழங்குவார்களா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
தாயகத் தமிழ் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் திரைப்படங்களை உருவாக்கி வரும் இளம் தலைமுறையினரின் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய தொடர் முயற்சிகள் மூலம், ஒரு காலத்தில் கேலிக்குள்ளாக்கப்பட்ட மலையாளத் திரையுலகம் இன்று இந்திய அளவில் கவனம் பெற்ற படைப்புகளை வழங்கி வருவது போன்று, எதிர்காலத்தில் ஈழத் தமிழ்த் திரைத்துறையும் வளர்ச்சியடைந்து, இந்திய இரசிகர்கள் ஈழத் தமிழ்த் திரைப்படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை உருவாகலாம் என்றும் விமர்சகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |