இலங்கையர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பளம் - நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்
சீனாவின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படும் கொழும்பு துறைமுக நகரத் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் ஊதியம் வழங்குவதற்கான சுதந்திரத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் கொள்கை தவறுகள் அல்லது மத்திய வங்கியின் நாணய சபையின் தீர்மானங்களால் மாற்றமடையும் நாணய சரிவுகளிலிருந்து தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக வெளிநாட்டு நாணயங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் கொழும்பு துறைமுக நகரம் பல நாணயங்களைக் கொண்ட ஒரு வலயமாக செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தொழிலாளர்களின் உண்மையான சம்பளம் மற்றும் சேமிப்பு தொழிலாளர்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வெளிநாட்டு நாணயத்தில் சம்பளம் வழங்கும் போது ரூபாயின் தேய்மானம் காரணமாக தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாணய பெறுமதி குறைப்பின் விளைவாக பாதிப்பு ஏற்படுமே தவிர இது சட்டமூலத்தின் விளைவால் ஏற்படாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் சம்பளத்தை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லையென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த கருத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை இலங்கையர்கள் இந்த நகரத்தில் ரூபாயில் அல்லது உள்ளூர் வங்கிகளிலுள்ள வெளிநாட்டு நிதிகளில் முதலீடு செய்ய முடியாது என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.
துறைமுக நகரத்தில் சேவைகள் அல்லது பொருட்களை கொள்வனவு செய்யும் இலங்கை மக்கள் துறைமுக நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வரி செலுத்த வேண்டுமெனஇ துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.