மின் நிலையங்கள் செயலிழப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
புதிய இணைப்பு
நாடு தழுவிய மின்தடையைத் தொடர்ந்து பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளதாக வெளிவந்த தகவல்களைத் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் முற்றிலுமாக மறுத்துள்ளது.
அத்துடன், எந்தவொரு மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகளும் செயலிழக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மின்கட்டமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து நீர்மின் நிலையங்களும் தொடர்ந்தும் இயங்கும் நிலையிலேயே இருப்பதாகவும், தற்போது மின் விநியோகத்தை மீள வழங்குவதற்காக அவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவன்றி, கட்டமைப்புத் தோல்வியைத் தொடர்ந்து நிலையான வழிமுறைகளின்படியே நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
மின் தடையினால் முற்றாக முடங்கியுள்ள மின் நிலையங்கள்!
சமனலவெவ மற்றும் நவ லக்சபான மின் உற்பத்தி நிலையங்களைத் தவிர, நுரைச்சோலை உள்ளிட்ட ஏனைய அனைத்து மின் நிலையங்களின் செயற்பாடுகளும் முற்றிலுமாகத் முடங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிவரும் திடீர் மின்சாரத் தடையைத் தொடர்ந்து இந்தத் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மின் தடையினால் நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 மின் பிறப்பாக்கிகளும் செயலிழப்பு!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் மின் தடை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (17) காலை திடீரென ஏற்பட்ட தேசிய மின் கட்டமைப்புத் தடையைத் தொடர்ந்து இந்த அவசர நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மின்தடைக்கான காரணம்
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள நாடளாவிய மின்தடைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கட்டம் கட்டமாக மின்சார விநியோகத்தை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |