இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் உயிரிழப்பு
கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15.08.2026) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தையடுத்து இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீற்றருக்கும் குறைவான உயரம் கொண்ட சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவர் பலி
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர், அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

எனினும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
BNPB வெளியிட்ட அறிக்கையின்படி, நிலநடுக்கத்தால் சிக்கா (Sikka) ரீஜென்சி பகுதியில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தோனேசியாவின் புவி இயற்பியல் முகமையான BMKG வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது கடலுக்கு அடியில் சுமார் 15 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 22 மணி நேரம் முன்