இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு
சதிந்தர்ஜீத் சிங் எனப்படும் கோல்டி பிரார் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அறிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் FBI அலுவலகம் இந்த அறிவிப்பை நேற்று (28.09.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
“கோல்டி பிரார் மிகவும் ஆபத்தான நபர் அவரைக் கைது செய்வதே எங்களின் முதன்மையான முன்னுரிமை” என FBI அதிகாரி பேட்ரிக் கிராண்டி தெரிவித்துள்ளார்.
இந்தியா கனடா புலனாய்வு அமைப்பு
FBI அதிகாரிகளின் தகவல்கள்படி குறித்த குற்றவாளியின் பெயர் கோல்டி பிரார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தியாவைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான குற்றக் குழுவின் வட அமெரிக்க நடவடிக்கைகளுக்கு தலைமை வகிப்பதாக FBI குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் கொலை, கடத்தல், கொள்ளை, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக FBI தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் கோல்டி பிரார் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவில் 2023ஆம் ஆண்டு சீக்கிய பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தற்போது குஜராத்தில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயுடன் இணைந்து கோல்டி பிரார் செயற்பட்டதாகவும் FBI குற்றஞ்சாட்டியுள்ளது.
கோல்டி பிரார் தொடர்பில் முன்னதாக 50,000 அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஒரு மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த கோல்டி பிராரை இந்தியா மற்றும் கனடாவைச் சேர்ந்த புலனாய்வு அமைப்புகளும் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |