இறுதிப் போரில் விடுதலை புலிகளின் தலைவர் தப்பி ஓட வில்லை : சபா குகதாஸ் தெரிவிப்பு!
இறுதிப் போரில் தவைவர் பிரபாகரன் தப்பி ஓட விரும்பவில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (saba kugathas) தெரிவித்துள்ளார்.
அண்மையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சர்வதேசம் காப்பாற்ற முடியாது போனமையால் தான் இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக சாடியிருந்தார்.
இந்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப் போர்
அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதிப் போர் நடக்கும் போது தலைவர் பிரபாகரன் அவர்கள் குடும்பமாக பாதுகாப்பாக வெளியேறிச் செல்லக் கூடிய சூழ்நிலைகள் இருந்தும் அதனை அவர் ஒரு போதும் விரும்பவில்லை.
அத்துடன் கடற்புலிகளின் நீர்மூழ்கிப் பிரிவு நீர்மூழ்கிக் கப்பலில் கொண்டு செல்ல பல தடவை முயற்சித்தனர்.தலைமைச் செயலக போராளிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
போரின் இறுதி வாரத்தில் குறிப்பாக மே 02 திகதியில் இருந்து நந்திக்கடல் பகுதியின் ஊடாக தளபதி சிறிராமை தலைவரை வெளி கொண்டு செல்ல புளூஸ்ரார் படகுகள் அதற்கான வெளி இணைப்பு இயந்திரங்கள் எரிபொருள் போன்ற ஏற்பாட்டுடன் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இவை யாவும் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முயற்சிகளை தமிழ் டயஸ்போறா முயற்சித்தது. அது தொடர்பான செய்திகள் அக் காலத்தில் வெளிவந்தன.
இனப்படுகொலை
இவை அனைத்தையும் நிராகரித்து தனது தாய் தந்தையரை பொது மக்களுடன் செல்ல அனுமதித்துடன் தன்னுடைய மூத்த மகன் மகளை களத்தில் நின்று போரிடச் சொன்னார் இளைய மகனை பாலச்சந்திரனை மகனின் விருப்பப்படி போராளிகளிடம் ஒப்படைத்தார்.
குடும்பமாக பாதுகாப்பாக அவரை வெளியேற்ற நூற்றுக்கணக்கான போராளிகள் தயாராக இருந்தும் அவற்றை நிராகரித்து இறுதி வரை களத்தில் நின்ற மண்டியிடாத வீரத் தலைவன். போர்க்குற்றம் அல்ல இனப்படுகொலை தான் இறுதிப்போரில் நடந்து அதனை மறைக்க மடைமாற்று வேலையை மேற்கொள்கிறார் சரத் வீரசேகர என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் : பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
