யாழில் இடம்பெற்ற "பேறுகால உளநலம்" நூல் வெளியீடு
வலுவற்ற தேசம். உயிர்ப்பற்ற மக்கள். நாம் யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கிறோம்? கேள்விக்குரிய விடயம் இது. 2009 இல் மௌனிக்கப்பட்ட போர் ஏற்படுத்தியிருக்கும் அனர்த்தங்கள் அளப்பரியது.
அந்த அனர்த்தத்துக்குப் பின்னால் நடைபெற்றுவரும் சமூகப் பிறழ்வுகள் பற்றி அதிகம் சிந்திக்கத் தவறிவிட்டோம். விளைவு வாள்வெட்டாக அது உருவெடுத்தது.
எமது மண் போதைப்பொருள் சந்தையாக மாற்றப்பட்டது. கள்ளக் கடத்தல்காரர்களின் கேந்திரமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
குடும்பப் பிணைப்புகள்
குடும்ப வன்முறைகள், குடும்பப் பிரிவுகள், குடும்பச் சீர்குலைவுகள் எனக் குடும்பந்தொடர்பான பிரச்சினைகைள் பல தோன்றி இருக்கின்றன. முன்னெப்போதும் இல்லாதவாறு பாலியல் வன்முறைகள், பாலியல் கொடுமைகள், என்ற வன்செயல்களோடு இணைந்து காணப்படுகிறது.
தற்போது கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் சிதைந்து தனிக் குடும்பங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன. அவர்கள் சேர்ந்திருந்தபோது காணப்பட்ட குடும்பப் பிணைப்புகள் தனிக்குடும்பங்களில் இல்லை.
அவற்றில் ஆதரவு என்ற விடயம் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது. அதில் தன்னுயிர் மாய்ப்பு என்ற விடயம் சாதாரண மனிதர்களிடமிருந்து தொடங்கித் தற்போது கர்ப்பால உயிர் மாய்ப்பு என்றவகையில் உருமாறியிருக்கிறது.
தனிக் குடும்பங்களில் கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுப்பென்ற மனோ இயல்பு இல்லாதவிடத்து அங்கு விரிசல்கள் தோன்றத் தொடங்குகின்றன. அதனால் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவும் மன இறுக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் மாற்றம் பெறுகிறது.
உள நல விழிப்புணர்வு
அந்த வகையில் உளவியல் சிக்கல்கள் தோன்றக் காரணமாக அமைகின்ற மேற்படி சூழலை எதிர்த்துப் போராடத் திராணியற்றவர்களே உயிர்மாய்ப்பு என்ற விடயத்தைக் கையிலெடுக்கின்றனர். தன்னுயிர் மாய்ப்பு என்ற விடயம் தற்போது கற்பகாலத் தன்னுயிர் மாய்ப்பு என்றவரை நீடித்துக் காணப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட பல கர்ப்கால மரணங்களில் தன்னுயிர் மாய்ப்பு மரணங்களே அதிகமானவை. ஒரு பெண்ணின் கர்ப்பால மனோ நிலையே பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியத்தின் அடித்தளமாக அமைவதாகவும், அதுவே தொடர்ந்து ஒரு குடும்பத்தின் மகிச்சியைத் தக்கவைத்துக் கொள்ளுவதாகவும் கருதப்பட்ட நிலையில், சென்ற கர்ப்பகால உள நல விழிப்புணர்வு வாரத்திலே அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அந்தவகையில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸ் அவர்கள் அதற்கான முன் ஆயத்தங்களைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்.யாழ்போதனா வைத்தியசாலையின் உள்ள உள மருத்துவப் பிரிவுக் கூடாக அதற்கான செயற்திட்டங்களை அவர் ஆரம்பித்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அரும்புகள் என்ற பெயரில் சிறுவர் உள நலப் பிரிவு ஒன்றும் அவரால் ஆரம்பிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. அப் பிரிவுக்கூடாகக் கடந்த 11 மே 2025 அன்று யாழ். நூலாகக் கேட்போர் கூடத்தில் “பேறுகால உள நலம் – பேசாததைப் பேசுவோம்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்வு நடைபெற்றது.
அதன் ஒரு அங்கமாகக் காலை எட்டு மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஐந்தாவது நுழைவாயில் அருகில் இருந்து ஒரு வழிப்புணர்வு நடைபவனி புறப்பட்டு நூலகக் கேட்போர் கூட மண்டபத்தை வந்தடைந்தது.
நூலகக் கேட்போர் கூடத்தில் காலை ஒன்பது மணியளவில் நிகழ்வு ஆரம்பித்தது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தமிழர் பொருளாதாரத்தின் ஆசிரியர் ஞானரூபன் கவி, சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் . கோகிலா மகேந்திரன் கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட விரிவுரையாளர்
மங்கலவிளக்கேற்றல் மற்றும் வரவேற்பு நடனத்தோடு நிகழ்வு ஆரம்பமானது .விநோதா அச்சுதன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை மற்றும் பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றன.
மருத்துவ பீட மாணவர்கள் பங்களிப்போடு ஒரு இசை நிகழ்ச்சியும் வாத்திய விருந்தும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சர்மிலா வினோதினி அவர்கள் தலைமையில் “பேசாதபொருளைப் பேசுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தாடலும் இடம்பெற்றது.
“குடும்பவன்முறை” என்ற தலைப்பில் மருத்துவர் சுகந்தி நவநீதன்அவர்கள் தனது கருத்தை முன்வைத்தார். தொடர்ந்து ”சமூக மட்டத்தில் பேறுகால உளநலம்” என்ற தலைப்பில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சரவணகுணாளன் பத்மினி அவர்களும் பேறுகால உளநலம் தொடர்பான பொதுமக்களின் நிலைப்பாடுகள் என்ற தலைப்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிறிந்திகா செந்தூரன் அவர்களும்,
“பெண்களுடைய உளநலம்” என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அபிராமி ராஜ்குமார் அவர்களும் “சிறுபிள்ளைப் பராயத்தின் உளநலம்” என்ற தலைப்பில் உள மருத்துவர் கலைச்செல்வி பொன்னுராஜ் அவர்களும் தமது கருத்துகளை முன்வைத்தனர். தொடர்ந்து மருத்துவர் சி.சிவதாஸ் அவர்கள் ஏழுதிய “பேறுகால உள நலம்” என்ற நூல் வெளியீடு இடம்பெற்றது.
அந் நூல் பற்றி மருத்துவர் சி.சுதாகரன் அவர்கள் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியர் மருத்துவர் சி.சிவதாஸ் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையோடு நிகழ்வு நிறைவுபெற்றது.
சமூகம் இதுவரை பேசாத பல விடயங்கள் பற்றி இந் நிகழ்வு பேசியது. இதுவரை பேசாதவர்கள் பலர் இதில் பேசி இருந்தனர்.
கருத்தாடல் நிகழ்வில் பேசியவர்கள் கர்ப்பகால உள நலம் பற்றிய பல புதிய விடயங்களை முன்வைத்துப் பேசினர். அதில் பல விடயங்கள் இதுவரை பேசப்படாத விடயங்களாகக் காணப்பட்டன.
இது போன்று பேசாதா விடயங்கள், பேசப்படாத விடயங்கள், பேசத் தயங்குகின்ற விடயங்கள் எனப் பல விடயங்கள் வெளிப்படையாகவும் உண்டு. மறைபொருளாகவும் உண்டு. இனி வருங்காலத்தில் அனைத்தையும் பேச வேண்டும், மக்கள் நலன் கருதி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
