பதவி துறக்கத் தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்- கோட்டாபயவுக்கு விடுத்துள்ள கோரிக்கை!
சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வத்தளை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வாழ்க்கையில் விட்டுக்கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும். நான் ஜோன் அமரதுங்கவை மிகவும் நேசிப்பவன். அவர் 1978 ஒக்டோபர் 28 ஆம் திகதி எனது பிறந்த நாளில் தொகுதி அமைப்பாளர் பதவியை பொறுப்பேற்றுள்ளார். இதனடிப்படையில், 42 ஆண்டுகளுக்கு பின்னரே வத்தளையில் இருந்து ஒருவருக்கு அரசியலுக்கு வர சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நானும் 40 ஆண்டுகள் வத்தளையின் தொகுதி அமைப்பாளராக பதவி வகித்தால், வத்தளையை சேர்ந்த இளைஞர்கள் எவரும் அரசியலுக்கு வர முடியாது. இதனால், இந்த பழைய முறைமையை மாற்ற வேண்டும் என நான் நினைத்தேன். 60 வயதுக்கு பின்னர் என்னால் அரசியலில் ஈடுபட முடியாது என்பதுடன் வத்தளையில் மேலும் மூன்று இளைஞர்களை உருவாக்க வேண்டும்.
அப்பாவி தாய் ஒருவரின் பிள்ளை நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்பிருக்க வேண்டும். அரசியல் ஒரு வகுப்புக்குரியதாக மாத்திரம் இருக்கக் கூடாது என நம்புகிறேன். கோட்டாபயவால் இதனை செய்ய முடியும். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கோட்டாபய பொது மன்னிப்பு வழங்கினால், எனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகி, அதனை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்க தயார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலையை வழங்குமாறு நான் கோட்டாபயவிடம் கோரிக்கை விடுக்கின்றேன். நான் ஏற்கனவே எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்டேன். தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்டால், சஜித் பிரேமதாசவுக்கோ, கட்சியின் செயலாளருக்கோ தாம் விரும்பியவருக்கும் அந்த பதவியை வழங்க முடியும்.
ரஞ்சன் ராமநாயக்க அந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என இலங்கையில் உள்ள எவரும் கூறமாட்டார்கள். என்னால் வீதியில் இறங்கி போராட முடியும். ஆனால் ரஞ்சன் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.