ஜனாதிபதியிடம் அலி சப்ரி விசேட கோரிக்கை
150 சட்டத்தரணிகளை பொலிஸ் தலைமைப் பரிசோதகர்களாக சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதற்கு அனுமதி வழங்குமாறு கோரி நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சட்டசேவையை வழங்கும் ஒரு முயற்சியாக இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ருவான் குணசேகர, ஜனாதிபதி ஆலோசகர் யூ.ஆர். டி சில்வா, நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்(சட்டம்)பியுமந்தி பீரிஸ் ஆகியோர் முன்னிலையில் இது குறித்து இன்று நீதியமைச்சில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அமைச்சரவையில் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவை ஒப்புதலின் பின் சட்டத்தரணிகளை நியமிக்க நேர்காணல்கள் நடத்தப்படும் என்றும் நீதியமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ஆட்சேர்ப்பு செய்யப்படுவோருக்கு அவர்களின் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
150 சட்டத்தரணிகளுக்கும் தேவையான பயிற்சிகளை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இப்பயிற்சிகள் அவர்களது நியமனத்துக்கு முன்னதாக முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
Tags : #Gotabhaya Rajapaksa #Ali Sabry #Police #Law