அமெரிக்காவை தொடர்ந்து மற்றுமொரு நாட்டிற்கு விஜயம் செய்யும் அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்காவிற்கான விஜயத்தை தொடர்ந்து ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானின் மாட்சிமைமிகு பேரரசரை சந்தித்துப் பேசவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வம்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் உச்சிமாநாட்டுச் சந்திப்பொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எக்ஸ்போ 2025 ஒசாகா
இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், முக்கிய ஜப்பானிய வணிகங்கள் மற்றும் டோக்கியோவில் உள்ள முதலீட்டாளர்களின் உயர் மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வணிக மன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
"எக்ஸ்போ 2025" இல், இலங்கைத் தினத்தின் வைபவத்திற்கான ஜப்பான் அரசாங்கத்தின் விருந்தினராக, “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்விலும் அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வு சர்வதேச பார்வையாளர்களுக்கு இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பொருளாதார இயலுமையை முன்னிலைப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜப்பானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினரிடமும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வு
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
ஜப்பான் விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை மேலும் பலப்படுத்துவதுடன், மென்மேலும் விரிவுபடுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
