விளிம்பிற்கு வந்த ஈஸ்டர் ஞாயிறு விசாரணை அறிக்கை: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் மறைக்கப்பட்ட பகுதிகள் உட்பட முழு அறிக்கையையும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய ஆணைக்குழு அறிக்கைகை மிகவும் கவனமாக ஆராய்ந்து விசாரணைகளுக்குப் பயன்படுத்துமாறு தாம் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள்
அத்தோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு மிகத் தெளிவான, படிப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இன்னும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்போது, ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, “உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டன.நான் அவர்களிடம் அதை கவனமாகப் படித்து விசாரணை நடத்த சொன்னேன்
வவுணதீவு படுகொலை
இந்தத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு இடங்களில் சர்ச்சையை கிளப்பிய சம்பவங்கள் நடந்துள்ளன.
வவுணதீவு காவல்துறை அதிகாரிகள் இருவரும் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஜாக்கெட்டை எடுத்து வீசியது யார்? அந்த சந்தேகங்கள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
