உயிர்த்த ஞாயிறில் நீதி கோரும் உறவுகள் : அரசியல் இலாபம் தேடும் அநுர அரசு
எப்பொழுதும் போல தான் அந்த பொழுது புலர்ந்தது. எதுவும் வித்தியாசமாக தெரிய வில்லை அழகான உற்சாகமான காலை பொழுது அது. விடுமுறை நாள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. அப்போது தான் இலங்கை ஊடகங்களை தாண்டி சர்வதேச ஊடகங்களும் பரபரக்க தொடங்கின.
என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று குழப்பம். செய்திகளை தேடி மக்கள் ஆங்காங்கே கூடத் தொடங்கின. சில நிமிடங்களில் நாடே அதிர்ச்சியில் உறைந்து போனது. காட்சி ஊடகங்களில் இரத்த வாடை வீசியது. சிதறி போயிருந்த உடல்களில் மனிதம் மறைந்து போய் இருந்தது.
அந்த ஒரு நாள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல மொத்த மனித குலத்துக்கே கருப்பு நாளாக மாறியது. அதுவே 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல். உலக மக்களை மீட்க தேவகுமாரன் ஆகிய இயேசு கிறிஸ்து முள்முடி தரித்த, கசையடியும், கல்லடியும் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து விண் நோக்கியதை ஈஸ்டர் ஞாயிறு என உலக வாழ் மக்கள் சிறப்பு ஆராதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாற்பது நாட்கள் ஆண்டவரின் விசுவாசத்தை விரதமிருந்து மனிட மகனின் உயிர்ப்பை கொண்டாட தயாராக இருந்த கிறிஸ்தவர்களுக்கு கண்ணீரும் கவலையும் மாத்திரம் மிஞ்சியது.
மானிட குலம் செய்த தவறுக்கு தன்னை தியாகம் செய்த நல்லாயனின் உயிர்ப்பு நாளில் பலர் பலியாவார்கள் என யாறும் கடுகளவும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
கொழும்பு பேராயத்திலுள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று உயர்தர ஹோட்டல்கள் ஆகியவை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இலக்குகளில் உள்ளடங்குகின்றன.
இதன் போது 40 வெளிநாட்டவர்கள் மற்றும் 45 குழந்தைகள் உட்பட சுமார் 315 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது,
இது இலங்கையில் போருக்குப் பிந்தையதான மிக பாரிய அளவிலான படுகொலைச் சம்பவமாகும். தேசிய தவ்கீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பு இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.
தற்கொலைக் குண்டுத்தாக்குதல்
இது குறித்த தகவல்கள் நாட்டின் அமைச்சரவைக்கோ அல்லது மூத்த அரசியல்வாதிகளுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.
ஆனால் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தனது டுவிட்டர் செய்திக்குறிப்பில், தேசிய தௌவீத் ஜமாத் அமைப்பின் முகம்மது சகரான் என்பவரின் தலைமையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் தனது செய்தியில் இணைத்துள்ளார். இக்கடிதத்தின்படி, இலங்கையிலுள்ள பல கிறித்தவக் கோவில்கள், இந்தியத் தூதரகம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டிருந்தன. தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது கிறித்தவர்கள் உயிர்த்த ஞாயிறு திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டிருந்தார்கள்.
உணவு விடுதிகளில் காலை உணவை அருந்துவதற்காகப் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டினரும் கூடியிருந்த வேளை. பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்காகத் இத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தன
தேசிய தௌவீத் ஜமாத்
அனைத்துத் தாக்குதல்களும் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டன. முதலாவது தாக்குதல் நீர்கொழும்பு, புனித செபஸ்தியான் ஆலயத்தில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது தாக்குதல் கொழும்பு, புனித அந்தோனியார் கோவிலில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மூன்றாவது தாக்குதல் நாட்டின் மற்றொரு புறத்தில் மட்டக்களப்பு நகரில் சீர்திருத்தத் திருச்சபையின் சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த தொடர்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யேசு கிறிஸ்துவின் சிலை
பல்வேறு புகைப்படங்கள் பல நேரங்களில் உலக வரலாற்றில் சாட்சிகளாக அமைந்து விடுகின்றன.
உதாரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் மகன் படுகொலை, அமெரிக்க வியட்நாம் போரின் கோர சாட்சியாக இருந்த குண்டு வெடிப்பில் சிக்கிய சிறுமியின் நிர்வாண புகைப்படம்,
ஜப்பானின் கிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது வான் உயர எழுந்த புகை மண்டலத்தின் புகைப்படம், சொமாலியாவில் பட்டினியில் மேலிந்து சாவில் விளிம்பில் இருக்கும் குழந்தையை இறையாக்க காத்திருக்கும் கழுகின் புகைப்படம், இதுபோன்ற எத்தனையோ வரலாற்று சோசங்களை ஆவணப்படுத்தியிருக்கும் புகைப்படங்களில் நீர் கொழும்பிலிருக்கும் புனித செபஸ்தியான் ஆலயத்தில் உள்ள யேசு கிறிஸ்துவின் சிலையும் ஆவணமாகியது துன்பியலே...
தீவிர வாதத்தின் கோர முகத்தை வெளிக்கொணரும் சாட்சி அப்பாவி மக்களின் துயரத்தின் சாட்ச்சியாக அது காட்சியளிக்கும். சில புகைப்படங்கள் உறங்கி கிடக்கும் அரசாங்கங்களை தட்டியொழுப்பி இருக்கின்றன. வியட்நாம் போர் நிறுத்த ஒப்பந்தம் அகதிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தி கொண்ட ஐரோப்பிய நாடுகள் என பல்வேறு மாற்றங்களை புகைப்படங்கள் நடத்தியிருக்கின்றன.
அப்படியெனும் இந்த புகைப்படமும் மதவெறிக்கும், தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்காதோ என பலரின் உல்லக்குமுறல்கள் வெளிப்படுத்திருக்கின்றன.
இலங்கை துயரத்தின் சாட்சி சொல்லும் யேசு கிறிஸ்துவின் சிலை ஆன்மீகம் அறியாதவரையும் கூட அசைத்து பார்த்திருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
எது எவ்வாறு இருப்பினும் ஒரு துர்பாக்கிய சம்பவம் நடைபெற்று ஆறு வருடம் நிறைவடைந்துள்ளது. காலத்தின் சக்கரத்தின் வலிகள் வேதனைகளுடன் மக்கள் வாழ்க்கையை கடத்தினாலும், இது போன்ற மற்றொரு சம்பவம் நடக்காது இருக்க அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும். மடித்த ஜீவன்களின் ஆத்ம சாந்திக்காக நாம் பிரார்த்திப்பதுடன். அன்றைய தாக்குதலில் மடிந்தது மனிதர்கள் மட்டுமல்ல மா தேவனும் தான்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Raghav அவரால் எழுதப்பட்டு, 20 April, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
