தமிழ்மக்களின் களமாக விளங்கும் அதிபர் தேர்தல்: தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்து
எதிர்வரும் அதிபர் தேர்தல் கனதியானதொரு செய்தியைக் கூறுவதற்கான களமாகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவது குறித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்கவேண்டியது அவசியமா? ஆமெனில், அதற்குப் பொருத்தமான நபர் யார்? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து
தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்
அவ்வகையில், இவ்விடயம் தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன்,
“இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகளும், டெல்லிக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அடுத்த கணமே காற்றில் பறக்கவிடப்படுகின்றனர்.
எனவே சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப்போக்கைச் சுட்டிக்காட்டக்கூடியவாறு எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் பொது வேட்பாளரொருவரை நிறுத்தி, அவருக்கு வாக்களிக்கவேண்டியது அவசியம்.” என்றார்.
அதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொது வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தனது பெயரை முன்மொழிந்தால், அப்போதைய கள நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு அதனைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர்
அதன்படி இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
“தமிழ்மக்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்கும் வகையில் இரண்டாம் விருப்பத்தெரிவின்றி, தமிழ் வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களித்தால் தான் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவதில் பயனிருக்கும்.
ஆனால் சி.வி.விக்கினேஸ்வரனோ அல்லது எம்மைத் தவிர்த்த வேறு எந்தவொரு தரப்பினரோ தமிழ்மக்களை ஏமாற்றி, அவர்களைத் தமக்கு வேண்டிய நபருக்கு வாக்களிக்கச்செய்யும் வகையிலான உத்தியாகவே இதனைப் பயன்படுத்திக்கொள்வர்.
ஏனெனில் குறித்த அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கும் அளிக்கக்கூடாது என அவர்கள் உறுதியாகக் கூறமாட்டார்கள்.
ஆகவே பொது வேட்பாளரை நிறுத்துவதால் எதிர்பார்க்கப்படும் உரிய பலனைப் பெறமுடியாது. ஆனால் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்மக்கள் வலுவானதொரு செய்தியைக் கூறியேயாகவேண்டும்.
எனவே அத்தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்காமல் முற்றுமுழுதாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.” என்றார்.
தமிழ்த்தேசிய விடுதலைக்கான இலக்கு
அதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் அறியத்தருகையில்,
“தமிழ்த்தேசிய விடுதலையை இலக்காகக்கொண்ட சமஷ்டி முறைமையிலான தீர்வை முன்னிறுத்தக்கூடியவகையில் தமிழ்த்தேசியம் சார்ந்த ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கலாம்.
தமிழ் வேட்பாளரொருவர் அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு எனினும், இதன்மூலம் தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய கனதியான செய்தியை வெளிப்படுத்தமுடியும்.
அதேபோன்று விரும்பினால் இரண்டாவது விருப்பு வாக்கை பெரும்பான்மையின வேட்பாளருக்கு வழங்கலாம்.
தமிழ்மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் களமாக எதிர்வரும் அதிபர் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்பதே எனது அபிப்பிராயம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |