சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து
பதில் காவல்துறை மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அக்கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சட்டதரணிகள் சங்கம் அறியத்தருகையில்,
“அக்கருத்து தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எந்தவொரு நபர் சார்பாகவும் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி ஒருவருக்கு உரிமை உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
சட்டத்தரணிகள் மீதான தாக்குதல்
சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் சட்டத்தரணிகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.” என்றது.
இந்நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் மேற்படி சுட்டிக்காட்டல் தொடர்பில் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,
கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை
“பதில் காவல்துறை மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் சம்பந்தமாக என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை.
என்னைப் பொறுத்தவரையில் நான் வெளிப்படுத்திய கருத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ளப்போவதில்லை.
ஒருசில சட்டத்தரணிகளின் நிலைமைகளை மையப்படுத்தி யதார்த்தமான கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளேன்.
ஆகவே அந்தக் கருத்துக்கள் தொடர்பில் தவறுகள் காணப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், குறித்த விடயம் சம்பந்தமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க இதுவரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னுடன் கலந்துரையாடவில்லை.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |