டிரான் அலஸின் குற்றச்சாட்டு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!
சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் தற்போது கைது செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக முன்னிலையாவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றம் சாட்டியமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சட்டத்தரணிகளின் உரிமையை மீறும் வகையில் டிரான் அலஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம், டிரான் அலஸுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.
சட்டத்துக்குட்பட்ட கைது நடவடிக்கைகள்
காவல்துறையினரால் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் சட்டத்துக்குட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டுமென கௌசல்ய நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் அவர்களை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
டிரான் அலஸிடம் கையளிக்கப்படவுள்ள கடிதம்
இவ்வாறான சட்டதிட்டங்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிய கடிதம் எதிர்வரும் நாட்களில் டிரான் அலஸிடம் கையளிக்கப்படுமென கௌசல்ய நவரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |