சிறிலங்காவின் அடுத்த அதிபர் அநுரகுமார : நம்பிக்கை வெளியிட்டுள்ள சுனில் ஹந்துன்நெத்தி!
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெறுவார் என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பாரிய அளவில் மக்கள் ஆதரவு தமது கட்சிக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், தமது கட்சி அடுத்து நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல்களுக்கான ஆண்டு
இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்த நிலையில், தேர்தல்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட தேவையில்லை என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியலமைப்புக்கமைய உரிய நேரத்தில் இலங்கையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் திட்டம்
மக்கள் ஆதரவு தமக்கு கிடைக்காது என்பதை நன்கு அறிந்திருப்பதால் தற்போது அதிபர் தேர்தலை ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது அல்லது கலைப்பதற்கு தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு அரசியல்வாதியும் ஆதரவளிக்க மாட்டார்கள் என சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |